ஃபெஞ்சல் புயல் எதிரொலி: எந்தெநெத மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கையாக இன்று 9 மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஃபெஞ்சல்’ புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை எதிரொலியாக தஞ்சாவூர் திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாக்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தஞ்சாவூரில் இரண்டு தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை எதிரொலியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
மேலும், புதுச்சேரி மாநிலத்திலும் இன்று கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.