ஃபெங்கல் புயல் எதிரொலி: துறைமுகங்களில் 3 மற்றும் 4-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகக் கூடும் என்பதால், துறைமுகங்களில் 3 மற்றும் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 6 மணி நேரத்தில் (இரவு 7.30 மணிக்குள்) புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மணிக்கு 13கி மீ-ல் இருந்து 10 கி.மீ-ஆக குறைந்திருக்கிறது. புயல் உருவாகிய பின்பு, தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும், மேலும் 75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை ஆகிய மூன்று துறைமுகங்களில் 4-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றவும், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 4 துறைமுகங்களில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் அருகில் உருவாவதையும், காற்றுடன் மழை பொழிவை குறிப்பது 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என கூறப்படுகிறது. அதே நேரம், நான்காம் எண் கூண்டு, துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்பதை குறிக்குமாம் (அதாவது) துறைமுகம் புயலால் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம்.
இந்நிலையில், மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.