ஃபெஞ்சல் புயல் எதிரொலி : நாளை 500 மருத்துவ முகாம்கள் – அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்!

ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக நாளை 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் நிறுவப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Medical Camp

சென்னை : ஃபெஞ்சல் புயல் காரணமாகச் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தற்போது தெரிவித்துள்ளார். புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் அதி கனமழை பெய்து வருகிறது.

மேலும், புயலின் தீவரத்தால் ஏற்பட்ட காற்றின் வேகத்தால் மின்கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளது. கனமழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாளை ஃபெஞ்சல் புயலின் தீவிரம் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் நாளை(1.12. 2024) 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். நாளை(1.12. 2024) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும்.

இதில் சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்கள் என ஆக மொத்தம் 500 மருத்துவ முகாம்கள் நாளை நடத்தப்படும். இந்த மருத்துவ முகாம்கள் தேவைக்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை நடக்கும் மருத்துவ முகாம்களில் காய்ச்சல், சளி பரிசோதனை , இரத்த கொதிப்பு , நீரிழிவு நோய்க்கான பரிசோதனை போன்ற அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி மருந்துகள், ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்க்கான மருந்துகள், உப்பு – சர்க்கரை (ORS) கரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்ற அத்தியாவசிய மருந்துகள் தேவைக்கு அதிகமாக கையிருப்பில் வைத்துக்கொள்ள மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இருப்பிடங்களுக்கு அருகே அமைக்கப்பட உள்ள இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் கேட்டு கொண்டுள்ளார்” இவ்வாறு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்