நாளை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்! இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்,என இன்னும் சில மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 2 நாட்களாகமையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெஞ்சல் புயலாக உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
புயல் உருவான நேரம்?
இந்த புயல் உருவாவதில் முன்னதாக தாமதம் ஏற்பட்டதாக வானிலை மையம் தகவலை தெரிவித்திருந்த நிலையில், எப்போது தான் புயல் உருவாகி கடையை கடக்கபோகிறது மழை நின்று இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என மக்கள் வானிலை தொடர்பான செய்திகளை கண்காணித்து வந்தனர்.
ஒரு வழியாக ஆட்டம் காட்டி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும், நாகையில் இருந்து 260 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும் ஃபெஞ்சல் புயல் உள்ளது.
மேலும், புயலாக மாறிய பின்னர் நகரும் வேகம் அதிகரிக்கவும் செய்துள்ளது. 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி பிறகு 13 கி.மீ. வேகத்தில் நகர்கிறது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையை எப்போது கடக்கும்?
ஃபெங்கல் புயல் நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்கவுள்ளதாகவும், புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள்
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.