ஃபெஞ்சல் புயல் நிவாரணம்: 3 மாவட்டங்களில் டோக்கன் விநியோகம்!
விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஃபெஞ்ஜல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 நிவாரணத் தொகை, நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.
சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அதன்படி, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்த நிவாரணத் தொகையை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் நடப்பதாகவும் அரசு கூறியுள்ளது.
இதில், வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் முதல்வர் அறிவித்த ரூ.2,000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் இன்று முதல் டோக்கன் வழங்கப்பட்டு 3 அல்லது 4 நாட்களுக்குள் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும் என அம்மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் தகவல் தெரிவித்துள்ளார்.