ஃபெஞ்சல் புயல் தாக்கம் : ரூ.2,000 கோடி கேட்ட முதல்வர்..போன் செய்த பிரதமர்!
ஃபெஞ்சல் புயல், வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
சென்னை : தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்டுள்ள கடுமையான மற்றும் வரலாறு காணாத சேதங்களைக் கருத்தில்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
புயலின் தாக்கம்
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த புயலின் காரணமாக, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதோடு நிலச்சரிவு ஏற்பட்டு பரிதாபமாக 7 பேர் உயிரிழந்தனர்.. மொத்தமாக 12 பேர் இந்த ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தனர்.
சேதம்
உயிர்சேதங்கள் மட்டுமின்றி 2,416 குடிசைகள், 721 வீடுகள் மற்றும் 963 கால்நடைகள், 2,11,139 ஹெக்டேர் பரப்பளவிற்கு விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. புயல் வெள்ளத்தினால் 9,576 கி.மீ சாலைகள், 1,847 சிறுபாலங்கள் மற்றும் 417 குளங்கள் சேதமடைந்துள்ளது. 1,649 கி.மீ அளவிற்கு மின் கடத்திகள், 23,664 மின்கம்பங்கள் மற்றும் 997 மின்மாற்றிகள் சேதம். 1,650 பஞ்சாயத்து கட்டிடங்கள் 4,269 அங்கன்வாடி மையங்கள், 205 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5,936 பள்ளிக் கட்டடங்கள், 381 சமுதாயக் கூடங்கள் மற்றும் 623 குடிநீர் வழங்கல் பணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
முதல்வர் கடிதம்
இந்தச் சேதங்கள் குறித்து, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது எனவும், இந்த இயற்கைப் பேரிடரின் விளைவுகளை சமாளிக்க மாநிலத்திற்கு அவசர நிதி உதவி தேவைப்படுவதாகவும், பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் கோடியினை உடனடியாக விடுவிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்து கடிதம் எழுதியுள்ளார்.
வாக்குறுதி கொடுத்த பிரதமர் மோடி
கடிதம் எழுதியதை தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். ஃபெங்கால் புயல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்ததோடு தமிழ்நாட்டிற்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என முதலமைச்சரிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது நடந்த விஷத்தையும் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ” தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.