உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!
ஜிப்லி வரைகலைக்காக ஒருவர் மூன்றாம் தர செயலியில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யும் போது அந்த புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது என சைபைர் கிரைம் எச்சரித்துள்ளது.

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி ஆர்ட் செய்யும் ஏதேனும் ஒரு செயலி அல்லது இணையதள பக்கத்தில் பதிவிட்டால் அது அவர்களது புகைப்படத்தை கார்ட்டூன் ஜிப்லி சித்திரம் போல மாற்றி கொடுத்து விடுகிறது. இது ஒரு கலைத்திருட்டு, ஒருவர் உருவாக்கிய கார்ட்டூன் கலையை, AI தொழில்நுட்ப உதவியுடன் செய்வது தவறு என்றும் பலரும் இதற்கு எதிர்கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
இருந்தும், பலரும் இந்த ஜிப்லி புகைப்படத்தை பெற தங்கள் புகைப்படத்தை மூன்றாம் தர பல்வேறு இணையதள பக்கம், செயலியில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் அந்த இணையதள பக்கம் அல்லது செயலி மூலம் அந்த புகைப்படம் தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை செய்தியும் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
இது தொடர்பாக தமிழக காவல்துறை சைபர் கிரைம் பிரிவினர் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், ” அங்கீகரிக்கப்படாத செயலிகள், இணையதளங்கள் மூலம் புகைப்படங்களை ஜிப்லி கார்ட்டூன் போல மாற்றும் போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத செயலிகள், இணையதளங்களுக்கு புகைப்படங்களை வழங்கும் போது தவறான செயல்களுக்கு அந்த புகைப்படங்கள் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது. ஜிப்லி கார்ட்டூன் புகைப்படங்களுக்காக வழங்கப்படும் புகைப்படங்களை சில சமூக வலைதள விஷமிகள் சைபர் கிரைம்களுக்கு பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
ஜிப்லி கார்ட்டூன் உருவாக்கத்திற்காக புகைப்படங்களை AI தளங்களுக்கு வழங்கும் போது கவனத்துடன் பயனர்கள் இருக்க வேண்டும். நாம் கொடுக்கும் புகைப்படங்களை வைத்து நமது பயோமெட்ரிக் தகவல்களை இணையதளங்களால் எளிதில் பெற இயலும்.
பயோமெட்ரிக் தகவல்களை வைத்து சமூக வலைதள குற்றவாளிகள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை கூட திருட முடியும். ஜிப்லி கார்ட்டூன்களுக்காக பயன்படுத்தும் இணையதளங்கள் வைரஸ் மூலமாக நமது செல்போன்களை கூட சில சமயம் கட்டுப்படுத்த முடியும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.