அலைமோதும் பக்தர்கள் கூட்டம்! கொடியேற்றத்துடன் தொடங்கியது குலசை திருவிழா!
உலக புகழ்பெற்ற குலசேகரபட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியுள்ளது.
சென்னை : இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசையில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவிலில் தான். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் மாலை அணிந்துகொண்டு பக்தர்கள் அம்மன், முருகன், விநாயகர், குரங்கு, கரடி போன்ற வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான தசரா திருவிழா, இன்று (3ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காலை 10.30 மணி அளவில் மந்திரங்கள் முழங்கக் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது.
இன்று திருவிழா தொடங்குவதை முன்னிட்டு குலசைக்கு திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பக்கதர்கள் பலரும் கடற்கரையில் இருந்து கும்பம் தூக்கிக்கொண்டு கோவிலுக்குள் சென்று காப்பு கட்டிவருவார்கள்.
எனவே, இன்று முதல் உலகபுகழ்பெற்ற தூத்துக்குடி குலசை ஸ்ரீ முத்தாரம்மன் தசரா ஆரம்பம் ஆகியுள்ளது. இன்றிலிருந்து, பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்கள் அணிந்து தர்மம் எடுத்து அதனை முத்தாரம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். 10 நாட்கள் நடக்கும் திருவிழாவின் கடைசி நாளில் அம்மன் அசுரனைச் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அதாவது தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசூரசம்ஹரம் அக்., 12ல் நடைபெறவுள்ளது.
எனவே, அதற்கும் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே, தசரா விழாவைக் காண இந்த 10 நாள்களும் லட்சக்கணக்கான மக்கள் மைசூர் மற்றும் குலசைக்கு வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.