மழையால் பயிர்கள் பாதிப்பு.! ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
கனமழையால் பாதிக்கப்ட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை என டெல்டா மாவட்டங்களில் பருவம் கடந்து பெய்த கனமழையின் காரணமாக பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பை ஆய்வு செய்வதா, அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் தலைமையிலான குழு பயிர்சேதங்களை பார்வையிட்டு இழப்புகளை பதிவு செய்தனர்.
இந்த டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட்ட அமைச்சர்கள் குழுவானது சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பருவம் கடந்து பெய்த கனமழை பாதிப்பு குறித்து வருவாய் துறை, வேளாண்மை துறை சார்பில் தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
அதில், 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பயிர் சேதமடைந்து இருந்தால், அதற்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ருபாய் வழங்கப்படும் எனவும், இளம்பயிர் சேதத்திற்கு ஹெக்டேருக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், உளுந்து சேதத்திற்கு விவசாயிகள் மீண்டும் பயிர் செய்ய 50 சதவீத மானியத்துடன் 8 கிலோ உளுந்து வழங்கப்படும் எனவும், நெல் அறுவடை இயந்திரமானது 50 சதவீத மானியத்துடன் வாடகைக்கு விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.