ஆளுநரின் விமர்சனம்… நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.!
முதல்வரின் வெளிநாட்டுப்பயணம் குறித்து விமர்சித்த ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.
உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்ற சுற்றுப்பயணம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். மேலும் தமிழக கல்வி நிலை குறித்தும் ஆளுநர் கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் தற்போது முழுநேர அரசியல்வாதியாக செயல்படுவதாகவும், துணைவேந்தர்கள் மாநாட்டை தனது அரசியலுக்காக பயன்படுத்தி முதல்வரின் வெளிநாடுகள் பயணம் குறித்து மறைமுகமாக பேசியுள்ளார்.
மேலும் தமிழகத்தின் கல்வி நிலை குறித்து, பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநர் முழுவதுமாக மறைத்துவிட்டு பேசியுள்ளார். கல்வியைப் பொறுத்தவரை தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது, மேலும் கல்வியில் முன்னிலையில் இருக்கும் தமிழகம், இந்திய அளவில் 18-வது இடத்தில் இருக்கிறது. மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் முதன்மையான 100 பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 22 பல்கலைக்கழகங்களும், 100 கல்லூரிகளில் 30 கல்லூரிகளும் இருக்கின்றன.
இது தவிர இந்தியாவின் முதல் 50 மருத்துவ கல்லூரிகளில் தமிழ்நாட்டில் 8 கல்லூரிகள் உள்ளன. மேலும் வெளிநாடுகளுக்கு சென்றால் முதலீடுகளை ஈர்க்க முடியுமா என்ற ஆளுநரின் கேள்விக்கு, கடந்த 2022 முதல் தற்போது ஏப்ரல் மாதம் வரை 108 நிறுவனங்கள் 1,81,000 கோடி அளவில் முதலீடு செய்துள்ளன, மற்றும் 2021-22ம்ஆண்டுகளில், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 4,79,213 நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 7 லட்சமாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.
தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை பெருக்குவதற்கு முதல்வர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம் தான், பிரதமர் மோடியும் குஜராத் முதலமைச்சராக இருந்த போது இவ்வாறு பயணம் சென்றுள்ளார். சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் தனது கருத்துகள் தவறானதாக வீடியோ ஆதாரங்கள் வெளியானதையடுத்து அதை திசை திருப்பவே ஆளுநர், இவ்வாறு பேசிவருவதாக அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார்.