குற்றாலம் செல்வோர் கவனத்திற்கு! கனமழை எதிரொலியால் குளிக்க தடை!
கனமழை காரணமாக குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடை விதிப்பு.
நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இந்த மழையானது இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களான நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம் தென்காசி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.