துவண்டு போன நேரத்தில் என்னை தட்டி கொடுத்தவர்கள் என் நண்பர்கள்.! கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி.!
நான் துவண்டு போன நேரத்தில் என்னை தட்டிக் கொடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றவர்கள் எனது நண்பர்கள். – என திண்டுக்கல் கிரிக்கெட் சங்க விளையாட்டு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சியாக தனது நண்பர்கள் பற்றி குறிப்பிட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அங்குள்ள கிரிக்கெட் சங்கத்தின் 37 ஆவது ஆண்டு விழா நேற்று முன்தினம் அப்பகுதியில் ஓர் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசு கோப்பை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘ நான் கிரிக்கெட் விளையாட சொல்லும்போதெல்லாம் எனது சுற்றத்தார் நீ கிரிக்கெட் பந்தை தூக்கிக்கொண்டு செல்கிறாய், உன் குடும்பத்தை எப்போது பார்க்கப் போகிறாய்? என்று என்னை திட்டுவார்கள். நான் அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் கிரிக்கெட் மீது கொண்ட அன்பால் அதில் தீவிரமாக செயல்பட்டேன்.’ என பேசினார்.
மேலும் பேசுகையில், ‘ நான் முறைப்படி கிரிக்கெட் விளையாட கற்றுகொள்ளவில்லை. டென்னிஸ் பாலில் தான் கிரிக்கெட் விளையாடினேன். டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெற்றாலும் நான் சென்று விடுவேன். எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அவர்களுக்கு நான் செய்த கைமாறு என்னவென்றால் கஷ்டப்பட்டு விளையாடி இந்திய அணியில் தேர்வானது மட்டும்தான்.’ என்றும்,
‘எல்லோர் வாழ்விலும் வழிகாட்டியாக ஒருவர் இருப்பார். அப்படி என்னுடைய வாழ்வில் இருந்தவர்தான் ஜெயப்பிரகாஷ். தற்போதும் அவர்தான் என்னுடைய வழிகாட்டியாக இருக்கிறார். ‘ என்றும்,
‘ திண்டுக்கல் மாவட்டத்தில் முகமது, சுதீஷ் போன்ற வீரர்கள் ராஞ்சியில் விளையாடி வருகின்றனர். அதுபோல் நிறைய வீரர்கள் தங்களுக்கான பாதையை தேர்ந்தெடுத்து உழைக்க வேண்டும். நாம் செல்லும் பாதையில் தடைகள் நிறைய வரும். அதனை கடந்து செல்ல வேண்டும். நான் அப்படிப்பட்ட சவால்களை கஷ்டமாக நினைக்காமல் ஏற்று கொண்டேன்.
நல்ல நண்பர்கள் நம்முடன் இருந்தால், அவர்களின் தூண்டுதல் பெயரில் நம்மால் பெரிய இடத்தை அடைய முடியும். எனக்கு யாராவது மோட்டிவேஷன் செய்து கொண்டே இருந்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி செய்ததால் தான் இந்த அளவுக்கு வெற்றி எனக்கு கிடைத்துள்ளது. என நினைக்கிறேன் நான் துவண்டு போன நேரத்தில் என்னை தட்டிக் கொடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றவர்கள் எனது நண்பர்கள்.’ என குறிப்பிட்டார்.
மேலும் பேசுகையில் ‘ விடாமுயற்சி, கடின உழைப்பு, தன்னடக்கம், இதையெல்லாம் கடைபிடித்து விளையாண்டால் யார் வேண்டுமானாலும் எந்த உச்சத்தை வேண்டுமானாலும் அடையலாம். அதனை மனதில் வைத்து அனைவரும் ஜெயிக்க வேண்டும்’ என தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசினார்.