கிரேன் விபத்து: தமிழர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு
மகாராஷ்டிராவில் கட்டுமானப் பணியிடத்தில், கிரேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பான முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமான பணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
இதில், இருவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 36) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (வயது 23) என்றும் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் பொதுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் அவர்கள் மேற்கொண்டார்.
மேலும், கிரேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.