தலைமை செயலகத்தில் விரிசலா.? “கட்டடம் உறுதியாக இருக்கிறது.!” எ.வ.வேலு விளக்கம்.!
தலைமை செயலகத்தில் விரிசல் ஏற்ப்படவில்லை. டைல்ஸில் ஏர் கிராக் ஏற்பட்டுள்ளது. கட்டடம் உறுதி தன்மையுடன் இருக்கிறது என அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : இன்று காலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பிரதான கட்டிடமான நாமக்கல் கவிஞர் மாளிகையில் சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலை அடுத்து அமைச்சர் ஏ.வ.வேலு பொறியாளர்களுடன் நேரில் சென்று விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்ட பகுதிகளில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் விரிசல் ஏற்பட்டதாக வெளியான செய்தி குறித்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ” நாமக்கல் கவிஞர் மாளிகையில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் அறிந்ததும் பொறியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தோம். இந்த கட்டடம் 1974இல் கட்டப்பட்டது. தலைமை செயலகத்தில் முழு அலுவல் பணிகளும் இங்கு தான் நடைபெறும்.
முதல் தளத்தில் விவசாயத்துறை அலுவல் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு தரையில் பாதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கல்லில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என பீதியடைந்து கீழ் தளத்திற்கு ஊழியர்கள் வந்துவிட்டனர்.
நாங்கள் பொறியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தோம். ஆய்வு முடிவில் கட்டடத்தில் எந்த பாதிப்பும் இல்லை. அதன் உறுதித்தன்மையில் எந்தவகையிலும் பாதிக்கப்படவில்லை. தரையில் பாதிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் 14 வருடங்களுக்கு முன்பு பதிக்கப்பட்ட சிறிய அளவிலான 1 அடி டைல்ஸ் ஆகும். அதனால் சிறு சிறு Air Crack ஏற்பட்டுள்ளது. அதனை தான் கட்டிடத்தில் விரிசல் என ஊழியர்கள் பயந்துவிட்டனர்.
நாங்கள் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டோம். நாளை முதல் இங்குள்ள 1 அடி டைல்ஸை நீக்கிவிட்டு புதிய 2 அடி அல்லது அதற்கு பெரிய புதிய டைல்ஸை பதிக்க உள்ளோம். கட்டடம் உறுதி தன்மையுடன் தான் இருக்கிறது. எல்லா பணிகளும் வழக்கம் போல தான் நடைபெற்று வருகிறது. ” என அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார்.