பட்டாசு கிடங்கு வெடி விபத்து..! காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் இரங்கல்..!

Selvaperunthagai

பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் கே.செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், கிருஷ்ணகிரி பழையபேட்டை அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 நபர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்கிறேன். சிவகாசி, விருதுநகர், சாத்தூர் போன்ற இடங்களில் வெடி விபத்து நடைபெறும் என்ற நிலை மாறி அனைத்து மாவட்டங்களிலும் தற்போது வெடி விபத்து ஏற்படுகின்றது.

மேலும், பட்டாசு ஆலைகள், கிடங்குகளிலும் அடிக்கடி வெடி விபத்துக்கள் நடைபெறுவதும், அதில் தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாகி வருகின்றது. இவ்வாறான வெடி விபத்துகள் உடனடியாக தடுக்கப்படவேண்டும். பட்டாசு ஆலைகளிலும், அவை பாதுகாத்து வைக்கப்படும் கிடங்குகளிலும் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருக்கிறது.

எனவே, இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லை என்ற நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். படுகாயமடைந்த அனைவருக்கும் உயரிய சிகிச்சை அளிக்கவேண்டும். சிகிச்சையை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். தற்பொழுது, இந்த கோரவிபத்தில் உயிரிழந்தவர்கள், படுகாயம் அடைந்த அனைவருக்கும் அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்