அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!
"சத்தியம் வெல்லும், நாளை நமதே" என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது.

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த மாதம் 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோதே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு என உடன்படிக்கை’ கையெழுத்தானதாக கூறியிருந்தார்.
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக சொல்லவில்லை என குறிப்பிட்டு இபிஎஸ் பேசியிருந்தார். அதனை இப்பொது இபிஎஸ் மறுத்துள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர் சந்திப்பில் கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாகக் கூறப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,” தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக யார் கூறினார்? அதிமுக கூறியதா? யார், யாரோ சொல்வதை வைத்து தேவையின்றி எங்களிடம் கேள்வி கேட்க வேண்டாம்.
நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் என்ன வெளியிட்டோம். அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதைப் பாருங்கள்” என்றார். இதையடுத்து மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியான பதிவில் #DMDKforTN என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அந்த பதிவை நீக்கப்பட்டுள்ளது.
இதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளதா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுகிறதா எனவும் கேள்வி எழுந்துள்ளது.