“தனது முதுகில் மூட்டை மூட்டையாக அழுக்கு;ஆனால்,அடுத்தவரை குறை கூறும் கயமைத்தனம்” – சிபிஐ(எம்) மா.செ. கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

Default Image

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எழுதக்கூடிய கடிதத்தையே திட்டமிட்டு மறைத்து பேசுவதை திட்டமிட்ட எதேச்சதிகாரம் என்பதா? (அ) பிரதமர் அலுவலகத்தின் நிர்வாக சீர்கேடுகளின் வெளிப்பாடு என்பதா? என்று சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் செட்டியுள்ளார்.

மத்திய அரசு உடனடியாக, ஹஜ் பயணிகள் சென்னையில் இருந்தும் புறப்படுவதற்கான ஏற்பாட்டை உறுதி செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“ஹஜ் யாத்திரைக்காக இந்தியாவில் இருந்து செல்லும் பயணிகள், 1987 ஆம் ஆண்டு முதல் விமானத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். அப்போது முதலே சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயண புறப்பாடு இருந்து வருகிறது. தற்போது முதன் முறையாக சென்னை விமான நிலையம் அப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், கொரோனா பரவல் காரணமாக சவூதி அரேபிய அரசாங்கமே வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்தது. அதனால் இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை பாதிக்கப்பட்டது. இப்போது நிலைமை ஓரளவு சீராகியுள்ள பின்னணியில் சென்னையை மட்டும் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது நியாயமல்ல.

ஒருவேளை கொரோனா பெருந்தொற்று பரவலை காரணமாக சுட்டிக்காட்டினாலும் கூட, இங்கிருந்து கொச்சிக்கு 700 கி.மீ., பயணம் செய்து சென்று பிறகு அங்கிருந்து விமானத்தில் புறப்படுவது எந்த வகையில் பாதுகாப்பு என்பது ஒன்றிய அரசுக்கே வெளிச்சம்.

இந்த தவறை சுட்டிக்காட்டியும், சென்னையில் இருந்து புறப்பாடு வேண்டும் என்று வலியுறுத்தியும் 2021 நவ., 5 ஆம் தேதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் கடிதம் எழுதினார். இதே கோரிக்கைக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும், பிரதமருக்கு நவ., 11, 2021 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், இதுபற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தபோது, பதில் கொடுத்த ஒன்றிய பாஜக அமைச்சர் ‘தமிழக அரசிடமிருந்து கோரிக்கை எழவில்லை’ என்பதாக திசைதிருப்பக்கூடிய விதத்தில், அடிப்படையற்ற தவறான தகவலை சொல்லியுள்ளார். இது நாடாளுமன்ற உரிமை மீறல் ஆகும்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எழுதக்கூடிய கடிதத்தையே திட்டமிட்டு மறைத்து பேசுவதை திட்டமிட்ட எதேச்சதிகாரம் என்பதா? அல்லது பிரதமர் அலுவலகத்தின் நிர்வாக சீர்கேடுகளின் வெளிப்பாடு என்பதா?,

நிலைமை இப்படியிருக்க, போலியான வாதங்களை முன்வைத்து பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுவது – தனது முதுகில் மூட்டை மூட்டையாக அழுக்கை வைத்துக்கொண்டு, அதனை மறைத்துக்கொண்டு அடுத்தவரை குறை சொல்லும் அப்பட்டமான கயமைத்தனமே ஆகும்.

தொடர்ச்சியாக, ஒன்றிய அரசாங்கம் தமிழகத்திற்கு இழைத்துவரும் அநீதிகளின் பட்டியலில் இதுவும் சேர்ந்துகொண்டுள்ளது. எனவே, ஒன்றிய அரசு உடனடியாக, ஹஜ் பயணிகள் சென்னையில் இருந்தும் புறப்படுவதற்கான ஏற்பாட்டை உறுதி செய்திட வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்