பாஜக பொறுப்புகளில் இருந்து சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜினாமா!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதத்தை நேரில் சந்தித்து வழங்கினார் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
புதிய ஆளுநர்கள் நியமனம்:
நாட்டில் உள்ள 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இதில், 7 பேர் வேறு மாநிலங்களில் இருந்து மாற்றம் செய்யப்பட்டவர்கள், 6 பேர் புதிய ஆளுநர்களாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நியமித்திருந்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக நியமனம்:
13 மாநிலங்களுக்கு நியமித்த புதிய ஆளுநர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
கட்சி பொறுப்புகள் ராஜினாமா:
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக பொறுப்புகளில் இருந்து மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை சென்னை பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்த சி.பி.ராதாகிருஷ்ணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி தனது ராஜினாமா கடிதத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் ஒப்படைத்தார்.
ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் விலகல் கடிதம் அளித்தார். விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். மேலும், வரும் 18ஆம் தேதி ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவி ஏற்கிறேன் எனவும் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கான பெருமை:
இதனிடையே, தமக்கு பதவி கிடைத்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான பெருமை என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த பாஜக தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழ் இனம், கலாசார, பண்பாடு, மொழியின் மீது மகத்தான பாசம், மரியாதை, அன்பு வைத்துள்ளனர் என்றார்.