கொவிட்-19 விவகாரம் : கோவில்களில் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவு.!
தமிழகத்திலும் கொவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு தற்போது எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவில் பகுதிகளிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கு தற்போது உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சியம்மன் போன்ற முக்கிய கோயில்கள் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது, கோயில்களுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கருவறை, சன்னதி மற்றும் கோயில் வளாகங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து கோயில்களிலும் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கோயில் ஊழியர்கள் சார்பில் மருந்து தெளிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.