மாரிதாஸை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
மாரிதாஸை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நெல்லை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சமீபத்தில் முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாஸை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், யூடியூபர் மாரிதாஸ் போலி இமெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக 2020-ல் பதியப்பட்ட வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இதற்கிடையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாஸை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த யூடியூபர் மாரிதாஸை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த ஆண்டு காதர் மீரான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 292A, 295 A, 505 ( 2), It act 67 என 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது, வரும் 30-ஆம் தேதி வரை மாரிதாஸை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தது.