அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8-வது முறையாக காவல் நீட்டிப்பு..!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து, செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே அளித்திருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனை அடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் அக்டோபர் 20ஆம் தேதி வரை அதாவது 7 நாட்களுக்கு அவரது நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 8-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.