எந்த உத்தரவும் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது! செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் எந்த உத்தரவும் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் திட்டவட்டம்.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் மனுவும், இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது.
அப்போது வழக்கு விசாரணையின்போது, அமைச்சர்களை நியமிப்பது ஆளுநரின் விருப்பம். செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதாலும், அவர் இதய அறுவை சிகிச்சை செய்து இருப்பதாலும் அவரால் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. எனவே இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர அனுமதிக்க கூடாது என செந்தில் பாலாஜிக்கு எதிராக வாதிட்டனர்.
இதன்பின், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர விருப்பமில்லை என்று தான் ஆளுநர் கூறியுள்ளார். அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஆளுநர் ரவி கூறவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் மட்டுமே பதவி விலக நேரிடும். ஆளுநருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
மேலும், செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த உத்தரவும் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்ப முடியாது எனவும் தலைமை நீதிபதி அமர்வு கூறி, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.