ரூ.100 கோடி நில மோசடி வழக்கு.! எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்.!
கரூர்: நிலமோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலி பத்திரங்கள் மூலம் அபகரிப்பு செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கானது, அண்மையில் காவல்துறையினரிடம் இருந்து சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் பெற எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது முன்ஜாமீன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது.
இதனை அடுத்து, சிபிசிஐடி போலீசார் சில தினங்களுக்கு முன்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கேரளாவில் வைத்து கைது செய்து கரூர் அழைத்து வந்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, எம்.ஆர்.விஜயபாஸ்கரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டு இருந்தார். அதற்கு கரூர் நீதிமன்றம் அனுமதி அளித்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.