வாக்கு எண்ணிக்கை: நாளை காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம்.!!
சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, நாளை காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம் என்று தகவல்.
தமிழம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில் 71.79% வாக்குகள் பதிவானது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேறப்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாளை காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் திமுக, அதிமுக, அமமுக, மநீம ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டது. புதுச்சேரியில் என்.ஆர். காங்- அதிமுக- பாஜக ஒரு அணியாகவும் திமுக- காங் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. கேரளாவில் 140 தொகுதிகளில் ஆளும் இடது முன்னணி- காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக ஆகியவை தேர்தலில் களம்கண்டுள்ளனர்.
இதுபோன்று அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மெகா கூட்டணியை உருவாக்கி சவாலாக களத்தில் இருக்கிறது. மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங், பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் இடையே போட்டி நிலவுகிறது.