“ஒரே வரியில முடிச்சிருக்கலாம்”..வேல்முருகனை கலாய்த்த துரைமுருகன்!
வேல்முருகன் விவரமாக வேண்டுகோள் ஒன்றை கேட்டுக்கொண்ட நிலையில், அதற்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான், இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 4-வது நாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போது அவரை கலாய்க்கும் வகையில் துரைமுருகன் பதில் கூறி அவையை சிரிப்பலையில் ஆழ்த்தினார்.
கூட்டத்தொடரின் போது வேல்முருகன் ” தற்போது ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக என்னுடைய தொகுதியில் இருக்கும் உளுந்தம்பேட்டை, நெல்லி குப்பம், பன்ரொட்டி இந்த பகுதி முழுவதும் பாதிப்புக்குள்ளானது. மத்திய அரசு குழு ஒன்று வந்து பார்த்தது. நம்மளுடைய அமைச்சர்கள் சிலர் வருகை தந்திருந்தார்கள். நானும் இது குறித்து அமைச்சருக்கு கடிதம் ஒன்று தந்து இருக்கிறேன்.
இதற்கு சிறப்பு நிர்வாக கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கு விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்து நான் சொன்ன இந்த இடங்களில் தடுப்பணைகள் கட்டி தரவேண்டும் என அமைச்சர் துரைமுருகனுக்கு கோரிக்கை வைக்கிறேன். அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணை நீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது. எனவே உங்களுடைய காலத்தில் அதை பண்ணி கொடுங்க அண்ணா” என பணிவாக வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.
உடனடியாக எழுந்த துரைமுருகன் ” உறுப்பினர் வேல்முருகன் சொன்ன அந்த திட்டம் பற்றிய விவரத்தை அதிகாரிகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். அதனை இந்த ஆண்டுக்குள் எடுத்துக்கொள்ளவும் நான் வற்புறுத்தி இருக்கிறேன். ஆனால், இதனை வேல்முருகன் ஒரே வரியில் சொல்லியிருக்கலாம் அதை இவ்வளவு நேரம் பேசியதில் நாங்கள் தான் பாதிக்கப்பட்டோம்” என கிண்டலாக அமைச்சர் துரைமுருகன் பதில் கூறினார். உடனே அவையில் இருந்த அமைச்சர்களும் சிரிக்க தொடங்கினார்கள்.