ஊர் சுத்தமாக உழைக்கும் தூய்மை காவலர்களின் கால்களை கழுவி பாத பூஜை செய்த ஊராட்சி மன்ற தலைவி…
கொரோனோ வைரஸ் தாக்கம் தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனோவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ துறை, காவல்துறை மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் இனைந்து மிகக் கடுமையாக கொரோனோவை கட்டுப்படுத்த போராடி வருகிறார்கள். இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் கிராமத்தில் சுமார் 1,250 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இந்த ஊரின் ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் திருமதி. சந்திரா ராமமூர்த்தி. இவர் ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கண்டராதித்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களான கண்டராதித்தம், பாக்கியநாதபுரம், க.மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூபாய் 300 மதிப்பிலான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியுள்ளார்.மேலும், தங்கள் கிராமத்தை தூய்மைப்படுத்தும் 11 தூய்மைப் பணியாளர்களையும் கௌரவிக்கும் பொருட்டு அவர்களை அழைத்து அந்த உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி பாதபூஜை செய்து வணங்கினார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத தூய்மைப் பணியாளர்கள் தங்கள் ஊராட்சி மன்றத் தலைவியை ஆரத்தழுவிக் கையெடுத்துக் கும்பிட்டனர்.இந்த செயல் அந்த ஊராட்சி மக்களிடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.