தமிழக முதல்வர் தலைமையில் கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டம்… கொரோனா உறுதி செய்ய்யப்பட்டவர்கள் 67பேர் என தகவல்….
மின்னல் வேகத்தில் பரவிவரும் கொடிய கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழக தலைமைச்செயலகத்தில் கொரோனா தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.பின் முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், தமிழகத்தில் தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 50-ல் இருந்து 67 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் மட்டும் தான் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசால் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத் தமிழக தலைமைச்செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை கொரோனா அறிகுறியுடன் தமிழகத்தில் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க 1.5 கோடி முகக்கவசங்கள் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.மேலும் 25 லட்சம் எண்ணிக்கையில் என்.95 முகக்கவசங்கள் வாங்கவும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் வர வேண்டியுள்ளது.தனிமைப்படுத்தப்பட்டவர்களில் கொரோனா அறிகுறி உள்ளோருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.