கொள்ளை லாபம் பார்க்க முக கவசம் (ம) சானிடைசர்களை பதுக்கிவைத்த இருவர் கைது… இத்தகைய நிலையிலும் இவர்களின் பண ஆசை…
கோரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும் அடிக்கடி கையைக் கழுவ வேண்டும் என அரசின் சார்பில் அறிவுறுத்தப்படும் நிலையில் சானிடைசர், முகக் கவசம் கிடைப்பதில் தட்டுப்பாடும், கூடுதல் விலைக்கும் தற்போது விற்கப்படுகிறது. கோரோனா நோய் தாக்கத்தைக் கண்டு பயந்து பொதுமக்கள் உணவுப் பொருட்கள், கிருமி நாசினிகள், சானிடைசர்களை அதிகமாக வாங்கி வீட்டில் சேமித்து வைக்கின்றனர். இதனால் சில வியாபாரிகள் இவற்றைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கின்றனர். அவ்வாறு விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது.இந்நிலையில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (24) மற்றும் முஹமது நிஜாம் (24) என்ற இரண்டு இளைஞர்கள் சானிடைசர்கள், முகக்கவசங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து பின்னர் கூடுதல் விலைக்கு விற்கலாம் என முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஆயிரக்கணக்கில் டப்பா டப்பாவாக கிருமி நாசினிகள், முகக் கவசங்களை வாங்கி பதுக்கிவிட்டனர். 144 தடை உத்தரவு வருவதற்கு முன்பாகவே மெடிக்கல் ஷாப்களில் மொத்தமாக சனிடைசர் மற்றும் முகக் கவசங்களை வாங்கி வைத்துள்ளனர்.
பின்னர் சமுகவலைதல செயலிகள் மூலம் சானிடைசர் மற்றும் முகக் கவசங்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்த ரகசியத் தகவல் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குச் சென்றது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கார்த்திகேயன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சானிடைசர் மற்றும் முககவசங்களை பறிமுதல் செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் இதுகுறித்துப் புகார் அளித்தனர். இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.