துப்புரவு தொழிலளர்களுக்கு அறிவித்த இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும்…அமைச்சர் வேலுமணி அறிவிப்பு…
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பலவற்றை எடுத்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. கொரோனவால் இதுவரை இந்தியாவில் 873 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இந்த பரவலை கட்டுப்படுத்த மருத்துவ துறை, காவல்துறை, துப்புரவு பணியாளர்கள் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். இதில் ஊரக உள்ளாட்சி பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே அமைச்சர் வேலுமணி அவர்கள் அறிவித்த துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கோவையில் நடந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் எளிதில் சிரமமின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.