சொந்த ஊர் செல்ல அனுமதிகேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி..
சொந்த ஊர் செல்ல அனுமதிகேட்டு ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி விரட்டினர்.
ஈரோடு மாநகர பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் சாய, சலவை, தோல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக வேலை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உதவ மாவட்ட ஆட்சியர் திரு. கதிரவனை அவர்களை சந்தித்து முறையிட உள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, பவானி மெயின்ரோடு வைராபாளையம் பம்பிங் ஸ்டேஷன் ரோடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் நேற்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர்.
அப்போது அங்கு வந்த கருங்கல்பாளையம் ஆய்வாளர் திரு. பாலமுருகன், அவர்களை அங்கிருந்து உடனே செல்லுமாறும் கூறினார். ஆனால் அந்த வடமாநில தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து விட்டு தான் செல்வோம் என கூறி அங்கேயே நின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள், அந்த வடமாநில தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தினார்.
இதனால் வடமாநில தொழிலாளர்கள் அங்கும், இங்கும் சிதறி ஓடினர். பின், ஈரோடு நகர் துனை கண்காணிப்பாளர் ராஜி அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வடமாநில தொழிலாளர்களை அவரவர் பணியாற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து தொழிற்சாலை உரிமையாளர்களை அழைத்து காவல்துறையினர் உரிய ஆலோசனை வழங்கினர். அப்போது, தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பஸ், ரயில் போக்குவரத்து துவங்கிய பிறகு அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.