மௌனமாக அரசு:புற ஊதா கதிர் கொண்டு வைரஸை கொல்லும் ரோபோ:கோவை மாணவர்கள் அசத்தல்..
புற ஊதா கதிர்களை பயன்படுத்தி கொரோனா வைரஸை அழிக்கும் நவீன ரோபோக்களை கோவை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்; மேலும் அரசு அனுமதிக்கு காத்திருப்பாதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸை அழிக்கும் ரோபோக்களை கோவை சேர்ந்த இளம் தொழில்முனைவோர் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் பயின்ற 2 மாணவர்கள் இளம் தொழில் முனைவோராக உள்ளனர். கணினி தொழில்நுட்ப தீர்வு, ரோபோ தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள், மருத்துவமனைகள், வீடுகள், வாகனங்களில் இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுகளை எல்லாம் புற ஊதா கதிர்களை பயன்படுத்தி அழிக்கக் கூடிய ரோபோக்களை தயாரித்து உள்ளனர். இந்த கண்டுபிடிப்பு ‘கட்டுமரன்’ என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் முத்துவெங்காளியப்பன், டாட்வேல்டு டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் அரவிந்த் ஆகியோர் கூறுகையில் நாங்கள் உணவகங்களில் உணவு பரிமாறும் ரோபோக்கள், தனியார் நிறுவனங்களில் காவல் புரியும் ரோபோக்களை தயாரித்து நாட்டின் பல பகுதிகளுக்கும், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் வழங்கி வருகிறோம்.
அரைஸ் பயோமெட் என்ற உயிரி மருத்துவ துறையில் பணியாற்றி வரும் மற்றொரு நிறுவனத்துடன் எங்கள் நிறுவனம் இணைந்து புற ஊதா கதிர்களை பயன்படுத்தி கொரோனா தொற்றை அழிக்கும் அதி நவீன ரோபோ மாடலை உருவாக்கி இருக்கிறோம். இத்தைய ரோபோக்கள் எல்லாம் கொரோனா வார்டுகளில் மருத்துவர்கள், செவிலியருக்கு மிகவும் உதவியாக செயல்படும் விதத்திலும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்கு மருந்து, உணவு ஆகியவற்றை அளிக்க உதவுவதற்கு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனா தொற்று இருக்கும் மருத்துவமனைகள், வீடுகள், அலுவலகங்கள், பேருந்து, ரயில்கள் போன்ற இடங்களில் பரவி இருக்கும் தொற்றை அழிப்பதற்கும் இதனை பயன்படுத்த முடியும். மத்திய அரசு அண்மையில் நடத்திய ‘கோவிட் 19’ சொல்யூஷன் சேலன்ச்’என்ற ஆன்லைன் தொழில்நுட்ப போட்டியில் பங்கேற்று தேசிய அளவில் முதல் 7 இடங்களிலும், மாநில அளவில் முதலிடத்திலும் நாங்கள் வந்திருக்கிறோம்.எங்களது தயாரிப்பு சரியானது தானா? என்பதை ஆய்வகத்தில் பரிசோதனை நடத்தி சான்றிதழ் பெற அதிகபட்சமாக 4 மாதங்கள் வரை ஆகும். ஆனால் அரசு ஒத்துழைப்பு இருந்தால் சான்றிதழை போர்க்கால அடிப்படையில் பெற முடியும். சீனா, இத்தாலியில் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் இது போன்ற ரோபோக்கள்தான் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் விலை ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாகும் .ஆனால், நம்மால் அந்த ரோபோக்களை உள்ளூரில் வெறும் ரூ.2 லட்சம் முதல் 5 லட்சத்துக்குள் தயாரித்து பயன்படுத்த முடியும். இவ்வாறு கூறினர்.