தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 2,162 ஆக உயர்வு.!
தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் இன்று சென்னையில் மட்டும் 94 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 767 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று ஒரே நாளில் 82 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், மொத்தம் 1,240 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு மேலும் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 30,580 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 48 பேர் இருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளனர். இன்று மட்டும் 8,087 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 1,09,961 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 2,162 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது கொரோனா வார்டில் 922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் பாதிப்பு விகிதம் 35.48 ஆகவும் குணமடைந்தவர்களின் விகிதம் 56 ஆகவும் உள்ளது. கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் 41 லிருந்து 44 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 33 அரசு, 11 தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.