புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு கொரோனா.!

சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மேற்குவங்க மாநில பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி.
கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் மேலும் 2 வாரத்திற்கு அதாவது மே 17 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 மண்டலமாக பிரித்து அதற்கேற்ப சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் வரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் அனைவரும் கண்டிப்பாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் 2526 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 28 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 1082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மேற்கு வங்க மாநில பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பெண் தங்கியிருந்த ஸ்ரீராம் நகர் பகுதி முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.