தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு 500-க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு.!
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா பாதிப்பு 500க்கு கீழ், அதாவது புதிதாக 447 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 5,625 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. இன்று 64 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 2,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை 2,91,432 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் 11,965 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 447 பேருக்கு கொரோனா உறுதியானது. இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 447 பேரில் ஆண்கள் 253 பேர், பெண்கள் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 7,365 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 447 பேரில் 24 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு சென்று வந்தவர்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.