சடலத்தை கையாளவோ, தொடவோ, முத்தமிடவோ கூடாது”- கையாளும் வழிமுறை குறித்து எய்ம்ஸ் வெளியிட்டது
கொரோனா வைரஸ் தொற்று தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வைரஸ் தாக்கி இறந்தவர்களின் சடலங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற வழிமுறைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 150க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸ்க்கு 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5800 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சீனாவில் பரவிய இந்த வைரஸ் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவியது.சீனாவில் கடுமையாக இந்த வைரஸ்க்கு பாதிக்கப் பட்டுள்ளனர்.சீனாவை அடுத்து இத்தாலி மற்றும் ஈரானில் வைரஸ் தாக்கியதில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் பரவிய இவ்வைரஸால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 2 பேரின் உயிரை காவு வாங்கியுள்ளது.இதனை அடுத்து கொரோனா பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்தது.
இந்நிலையில், கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற வழிமுறைகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டு உள்ளது.அதன்படி கொரோனா தாக்கி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர், உயிரிழந்தால் உடனே சிறிதும் தாமதிக்காமல் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல வேண்டும் சடலத்தை கையாளுகின்ற பணியாளர்கள் முதலில் தங்கள் உடல் முழுவதையும் மறைக்கக் கூடிய கவச உடை, N 95 அல்லது N 100 முகமூடியை அணிந்திருக்க வேண்டும்.
தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் உறவினர்கள் எந்த காரணத்திற்காகவும் சடலத்தை தொடவோ, முத்தமிடவோ கூடாது. சடலத்தை அடையாளம் காண ஒரே ஒரு நெருங்கிய உறவினரை மட்டும் அனுமதிக்க வேண்டும். ஆனால் அவரும் முககவசம், பாதுகாப்பு உடைகளை அணிந்திருக்க வேண்டும்.அதே போல் எந்த காரணத்திற்காகவும் உறவினர்கள் சடலத்தைகையாளக் கூடாது. மூன்று அடுக்குகளாக சடலத்தின் மீது துணிகள் சுற்ற வேண்டும். மூன்றாவது அடுக்கின் மீது 0.5 சதவிகிதம் சோடியம் ஹைபோக்குளோரைட் தெளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
சடலத்தை பாதுகாப்பு கவச உடை அணிந்த பணியாளர்கள் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். சாதாரண இடுகாட்டில் சடலத்தை எரிக்கலாம். இதனால், பிறருக்கு வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது.மாறாக
ஒருவேளை சடலத்தை புதைக்கும் பட்சத்தில் குழியின் மீது கான்கிரீட் மேடை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற நபர்களின் சடலங்களை இம்முறையிலே அப்புறப்படுத்த வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.