கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா.?
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசர காலத்துக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, நாடு முழுவதும் வரும் 16-ஆம் தேதி முதல் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்துக்கு புனேவில் இருந்து 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று வந்தடைந்தன என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனை கூறிருந்தார்.
சீரம் நிறுவனத்தின் 5.36 லட்சம் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் 20,000 கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளது. சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு தடுப்பூசி விநியோகம் என்பது குறித்து பார்க்கலாம்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 1,18,000 தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என்று சுகாதார செயலாளர் கூறியுள்ளார். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு 25,000 தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் 40,200 தடுப்பூசிகள் விநியோகம். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு 28,600 தடுப்பூசிகளும், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களுக்கு 54,100 தடுப்பூசிகளும் விநியோகம் செய்யப்படும்.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 19,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும். நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு 51,700 தடுப்பூசிகள் விநியோகம். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு 42,100 தடுப்பூசிகளும், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 59,800 விநியோகம். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 73,200 தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.