முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை- தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், நேற்று புதிதாய் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனையடுத்து, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிகிச்சைக்கான கட்டண விபரங்களை வெளியிட்டார்.
அதில் அவர், அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறியுள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 சிகிச்சை கட்டணம் வசூலிக்கலாம் எனவும், தீவிர சிகிச்சை பிரிவில் அணைத்து வசதிகளுடன் நாளொன்றுக்கு ரூ. 10,000-15,000 வரை சிகிச்சை கட்டணமாக வசூலிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அரசு காப்பீடு அட்டை வைத்திருப்பவர்கள் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணமே செலுத்த தேவையில்லை எனவும், தனியார் மருத்துவமனைகளில் 25% படுக்கைகளை அரசு காப்பீட்டின் கீழ் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவித்தார்.