தலைமைக் காவலருக்கு கொரோனா.! ஊரின் எல்லைகளுக்கு சீல் வைப்பு.!
பெரம்பலூரில் பணியாற்றி வரும் தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, காவலரின் சொந்த ஊர் எல்லைகள் மூடப்பட்டன.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆகவும் உள்ளது. இதில் நேற்று மட்டும் 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, 82 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 365 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் இறப்பின் விகிதம் 1.1 ஆகவும், குணமடைந்தவர்களின் விகிதம் 26.6 ஆகவும் உள்ளது என தெரிவித்தனர்.
இந்நிலையில், பெரம்பலூரில் பணியாற்றி வரும் தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவலரின் சொந்த ஊர் எல்லைகள் மூடப்பட்டன. அந்த காவலரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சியில், காவலருக்கு தொற்று உறுதியானதை அடுத்து அப்பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் பரப்பளவு எல்லைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. பின்னர் அவர் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை செய்து வருகின்றனர்.