வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை” -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது. கடந்த ஆறு மாதத்தில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முந்தைய கொரோனா காலகட்டத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளது. எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை. நேற்று 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நான்கு பேருக்கு மட்டும் தான் தொற்று உறுதி செய்யப்பட்டது. பண்டிகை காலங்கள் தொடர்ச்சியாக வரும் காரணத்தினால் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.