மீண்டும் அதிகரிக்கும் கொரோனா;இவை கட்டாயம் – மரு.செயலாளர் போட்ட உத்தரவு!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக நேற்று முன்தினம் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி,அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும், அக்கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
“அனைத்து கல்வி நிலையங்கள்,அலுவலகங்கள் என கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.அதே சமயம்,கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு மக்கள் சென்று வரும் நிலையில்,கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், மேலும்,அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .
இதனையடுத்து,கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை சம்மந்தப்பட்டவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதே சமயம்,மாவட்ட அளவில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும்”,என உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவத்துறை செயலாளர்,பேரிடர் மேலாண்மைதுறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.