குட்நீயூஸ்…!இலங்கைத் தமிழர்களுக்கு,கொரோனா நிவாரணத் தொகை ரூ. 4000 வழங்கும் திட்டம் – முதல்வர் ஸ்டாலின்..!
இலங்கைத் தமிழர்களுக்கு,கொரோனா நிவாரணத் தொகை ரூ. 4000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் முகாமிற்கு வெளியே வசித்து வரும் 13,553 இலங்கைத் தமிழ் குடும்பங்களுக்கு,கொரோனா நிவாரணத் தொகை ரூ. 4000 வழங்க ஆணைபிறப்பித்து, நிதி வழங்கும் நிகழ்ச்சியினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகவும், ஊரடங்கு காலத்தில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு 4000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் பலர் பல்வேறு பகுதிகளில் முகாமிற்கு வெளியேயும் வசித்து வருகின்றார்கள். அவர்கள் சிறு தொழில்கள், தினக்கூலிப் பணிகள் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்ததை அறிந்து, அவர்களின் நலனைக் காத்திட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்பு நேர்வாக, முதல் முறையாக முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கை தமிழ்க் குடும்பங்களுக்கு தலா 4000 ரூபாய் வீதம் மொத்தம் 5 கோடியே 42 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்திட அரசாணை வெளியிட்டார்கள்.
அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை, 5 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வின் போது, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் முனைவர். வெ. இறையன்பு, இ.ஆ.ப., பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் முனைவர். டி.ஜகந்நாதன், இ.ஆ.ப., அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர் நல ஆணையரக இயக்குநர் திருமதி. ஜெஸிந்தா லாசரஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.