கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என தீவிரமாக கண்காணிக்க வேண்டியுள்ளது – சுகாதாரத்துறை செயலர்
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என தீவிரமாக கண்காணிக்க வேண்டியுள்ளது என்றும், தொற்று பரவும் இடங்களில் மினி நோய் கட்டுப்பாட்டு பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தடுப்பு மருந்து எல்லாருக்கும் கிடைக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களை தேடி மருத்துவத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்க உள்ளதாகவும், தமிழகத்திற்கு இதுவரை 2.54 கோடி டோஸ் கொரோனா தடுப்பு ஊசிகள் வந்துள்ளது. அதில் 2.2 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோவாக்சின் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.