கொரோனா விவகாரம்… தனியார் பரிசோதனை கூடங்களுக்கு தடை… அரசாணை வெளியீடு…
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிக்க மற்றும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு சிகிச்சை பிரிவு அல்லது அறை வைத்து பராமரிக்க வேண்டும். பரிசோதனையின்போது அந்த நபர் கடந்த 28 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றிருந்தாலோ அல்லது வெளிநாட்டுக்கு சென்று கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் இருந்தால் அவரை 14 நாட்கள் வீட்டில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தவேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருந்தால் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கொரோனா வைரஸ் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பான விவரங்களை சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் சுகாதார அதிகாரியிடமும், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனில் அம்மாவட்ட சுகாதார சேவைகள் துணை இயக்குனரிடமும் உடனடியாக தெரிவிக்க வேண்டும். வெளிநாடு சென்று திரும்பிய கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் இருந்தாலோ, அறிகுறி இருந்தாலோ அந்த நபர் தனிமைப்படுத்துவதற்கோ அல்லது மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுவதற்கு மறுப்பு தெரிவித்தால் பொது சுகாதாரத்துறை இயக்குனர், ஊரக சுகாதார சேவைகள் மருத்துவ இயக்குனர், மாவட்ட ஆட்சியர்கள் உள்பட வரையறுக்கப்பட்ட அதிகாரிகள் அவர்களை கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தவோ அல்லது சிகிச்சை பெறவோ நிர்ப்பந்திக்கவேண்டும் என்றும், தனியார் பரிசோதனை கூடங்கள் கொரோனா வைரஸ் மாதிரி எடுக்கவோ, பரிசோதிக்கவோ கூடாது என்றும்,தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ளார்.