மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா.!
சென்னை அயனாவரம் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து அனைத்து மாவட்டங்களிலும் பரவியுள்ளது. இதனால் பாதிப்பு தினந்தோறும் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் மறுபக்கம் வைரஸில் இருந்து குணமடைந்து வருகிறார்கள். அதன்படி நேற்று மட்டும் புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதுமட்டுமில்லாமல் 94 பேர் குன்னமடைந்த நிலையில், மொத்தம் இதுவரை 960 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1821 ஆகவும் பலி எண்ணிக்கை 23 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னை அயனாவரம் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புளியந்தோப்பைச் சேர்ந்த இவர், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மருத்துவமனைக்கு வராமல் இருந்துள்ளார். நேற்று மருத்துவமனை வந்த தூய்மை பணியாளருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. பின்னர் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
மேலும் அதே ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் ஒருவருக்கு அறிகுறி இருப்பதாகவும், அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர். அந்த செவிலியரின் கணவர் வேறொரு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், அவருடைய மாதிரிகளும் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.