ஆன்மிக சுற்றுலா சென்று வந்த 2 பெண்களுக்கு கொரோனா.!
தமிழகத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் தற்போதுவரை 17,265 பேர் பாதிக்கப்பட்டு, 543 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் 1,477 பேர் பாதிக்கப்பட்டு, 15 பேர் உயிரிழந்த நிலையில், 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதனிடையே நாடு முழுவதும் 80 சதவிகிதம் பேர் சளி, காய்ச்சல் எந்தவொரு அறிகுறிகள் இல்லாமலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் இன்றிலிருந்து கொரோனா தாக்கம் குறைந்த பகுதியில் நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் அளிக்கலாம், அதுவும் அம்மாநிலமே முடிவெடுத்து அறிவிக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி தமிழகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி, மே 3 வரை உள்ள ஊரடங்கில் எந்தவொரு தளர்வும் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் பயணம் மேற்கொண்ட 125 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.