கொரோனா எதிரொலி : கர்நாடகாவில் இருந்து திரும்பிய மீனவர்களை தங்க வைக்க எதிர்ப்பு!சாலை மறியலில் ஈடுபட்ட சாயல்குடி மக்கள்!
கடந்த சில மாதங்களாகவே கொரோனா குறித்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது. சீனாவை தொடர்ந்து, இந்த கொரோனா வைரஸ் நோயானது, இந்தியாவிலும் பரவியது. தமிழகத்திலும், இந்த நோயால், 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூரில் இருந்து, பல கிராமங்களில் மக்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூருக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கொரோனா ஊரடங்கு எதிரொலியால் நேற்று முன்தினம் கடல் மார்க்கமாக நாட்டு படகில் சாயல்குடி அருகே மூக்கையூருக்கு அவர்கள் வந்தனர்.
இந்த 12 பேரில், இருவர் மட்டும் சாயல்குடியை சேர்ந்தவர்கள் என்பதால் மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் இறங்கினர். தகவலறிந்து சென்ற கடலாடி தாசில்தார் முத்துக்குமார், மீனவர்கள் இருவரையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தினார். அங்கு வந்த மருத்துவக்குழுவினர் இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்தனர். இதில், கொரோனா அறிகுறி இல்லை என தெரியவந்தது.
கொரோனா அறிகுறி இல்லை என்றாலும், மீனவர்கள் இருவரையும் தனிமைப்படுத்த கலெக்டர் அறிவுறுத்தினார். இதனையடுத்து மூக்கையூர் அருகே கன்னிகாபுரி இயற்கை பேரிடர் காப்பக கட்டிடத்தில் தங்க வைக்க அதிகாரிகள் அழைத்து சென்றனர். இதையறிந்த கன்னிகாபுரி கிராம மக்கள், மீனவர்களை அங்கு தங்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருவரையும் முதுகுளத்தூர் அழைத்துச் சென்றனர்.