வேலூர் நிகழ்ச்சியில் முதல்வரை வரவேற்ற வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி!
வேலூர் கொரோனா தடுப்பு நிகழ்ச்சியில் முதல்வரை வரவேற்ற வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் வேலூர் மாவட்டத்தில் கொரானா தடுப்பு பணிகள் குறித்தும் வளர்ச்சி பணிகள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் அதன்பிறகு தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கார் மூலம் புறப்பட்டு உள்ளார். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக முதல்வர் வருவதை அறிந்த அதிமுகவினர் அவரை வரவேற்பதற்காக காத்திருந்துள்ளனர். எனவே அதை அறிந்த முதல்வர் காரை நிறுத்துமாறு கூறி கீழே இறங்கி அமைச்சர் நிலோபர் கபில் உட்பட பலர் போர்திய சால்வை பூங்கொத்து ஆகியவற்றை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் கூடியிருந்த அதிமுக கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு கைகொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மீண்டும் தர்மபுரி நோக்கி புறப்பட்டார். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாணியம்பாடி வருவாய் ஆய்வாளர் மற்றும் அங்கிருந்த மற்றொரு கிராம நிர்வாக அலுவலர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.