குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்கப்படும் – அமைச்சர் ஐ.பெரியசாமி..!
- குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில்,குறுவை சாகுபடிக்கு கடன் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம், நேற்று, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.அந்த ஆலோசனைக் கூட்டத்தில்,தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி,
- “தமிழகம் முழுவதும் உள்ள குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படும். அதற்காக ரூ.11,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அதுமட்டுமல்லாமல்,கடந்த காலங்களில் விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையானது,பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- கூட்டுறவு வங்கிகளில்,2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் விவசாயிகளால் வாங்கப்பட்ட கடன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதனை,மூன்று தவணைகளில் கட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கடன் தள்ளுபடியில் இந்த கடன் தொகை விடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.எனவே,இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
- மேலும் கூட்டுறவு சங்கங்களை நாடி வரும் உறுப்பினர் அல்லாத பிற விவசாயிகளையும் உறுப்பினர்களாக கருத்தில்கொண்டு,அவர்களுக்கும் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மேலும்,சிறு,குறு விவசாயிகள் என அனைத்து விவசாயிகளுக்கும் வங்கிகளில் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது”,என்று தெரிவித்தார்.