குன்னூர் விபத்து : தற்போதைய நிலவரம் என்ன.? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.!
தென்காசி மாவட்டத்திலிருந்து ஊட்டி பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்த பேருந்து நேற்று மாலை குன்னூர் மரப்பாலம் பகுதியில் கொண்டை ஊசி வளைவில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த பலர் குன்னூர் அரசு மருத்துவமனை, ஊட்டி அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இறந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆட்சி தலைவர்கள் மீட்பு படையினர் ஆகியோரிடம் ஆலோசனை செய்து பின்னர் செய்தியாளரிடம் விபத்து குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விவரித்தார். அவர் கூறுகையில், கடந்த வியாழன் அன்று தென்காசி மாவட்டத்தில் இருந்து கொச்சி, குருவாயூர், குன்னூர் பகுதிக்கு தனியார் சுற்றுலா அமைப்பு மூலம் குழந்தைகள் உட்பட 60 பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்கள் நேற்று அதிகாலை குன்னூர் சென்றுள்ளனர். குன்னூரில் சுற்றுப்பயணம் முடித்து விட்டு, மாலை 6.00 மணிக்கு அங்கிருந்து திரும்பி வந்துள்ளனர். வரும் வழியில் மரப்பாலம் அருகே இவர்கள் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
இந்த இடத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். சம்பவம் அறிந்தவுடன் காவல்துறையினர், மாவட்ட ஆட்சித் தலைவர், தன்னார்வலர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். அப்போது மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
நேற்று , விபத்து சம்பவம் அறிந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சித் தலைவர் உடன் தொலைபேசியில் ஆலோசித்து விபத்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி கூறியுள்ளார். மேலும் அமைச்சர் ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியினை மேற்பார்வையிட்டுள்ளார்.
நேற்று, குன்னூர் அரசு மருத்துவமனையில் 14 மருத்துவர்கள் பணியில் இருக்க வைக்கப்பட்டு, தகுந்த சிகிச்சை அளித்துள்ளனர். லேசான காயங்கள் பெற்ற 15 பேர் குன்னூர் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை வரும்போது கோவை மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலன்விசாரித்தேன். இப்போது அதில் ஒருவர் அதிக பாதிப்பு அடைந்துள்ளார் என்றும், ஒருவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்றும் இருவரது உயிருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.
தற்போது குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து விட்டோம். அடுத்ததாக ஊட்டி செல்ல உள்ளோம். அதன் பிறகு கோவை சென்று சிகிச்சையில் உள்ள அந்த 2 பேரைபார்வையிட உள்ளோம். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தாலா 2 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார். அந்த தொகையானது விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அவர்கள் சொந்த ஊரில் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.