அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: ‘அதிக பாவங்கள் செய்பவர்கள்’… அமித் ஷாவிற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி.!
அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில் “அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்லிக்கொண்டே இருப்பதற்கு பதிலாக கடவுள் பெயரை சொல்லியிருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என்று அமித் ஷா கூறியிருந்தார்.
அதனைக் கண்டித்து இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜெய் பீம்.. ஜெய் பீம்.. முழக்கங்களோடு நாடாளுமன்ற வளாகத்தில் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால், பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவ்வாறு பேசியதற்கு,”அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள், சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!#BabasahebAmbedkar
— M.K.Stalin (@mkstalin) December 18, 2024